மலேசிய விமானம் நேற்று திடீரென நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து உக்ரைன் வான் எல்லையை புறக்கணிக்க இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும் அதிரடி முடிவு எடுத்துள்ளன.
நேற்று உக்ரைன் நாட்டின் வான் எல்லையில் மலேசிய விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு அதில் பயணம் செய்த 295 பயணிகளும் பரிதாபமாக பலியாகினர். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு விமான நிறுவனங்கள் உக்ரைன் வான் எல்லையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
எந்த காரணத்தை முன்னிட்டும் உக்ரைன் வான் எல்லை வழியே விமானங்கள் பறக்க வேண்டாம் என ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டு , மாற்று வழித்தடத்தில் விமானங்களை இயக்க ஏர் இந்தியாவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அதிரடியாக முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் லூப்தான்சா, மலேசியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான நிறுவனங்களும் உக்ரைனில் சர்ச்சைக்குரிய கிழக்குப் பகுதி வான் எல்லையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
உக்ரைன் நாட்டு வான் எல்லையை பயன்படுத்த வேண்டாம் என விமானிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.