ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி இலவசமாக பேசி செல்போன் பயனாளிகள் இனிமேல் அதற்கான கட்டணங்களை கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் இந்த கட்டண முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது ஏர்டெல் நிறுவனம். ஸ்கைப், வைபர் போன்ற இலவச ஆப்ஸ்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரடியாக இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இதுவரை இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய முடிவின்படி ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் கால்களுக்கு புதிய கட்டண விபரங்களையும் அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் மணிக்கணக்காக பேசிய மக்களுக்கும் இந்த செய்தி உண்மையிலேயே ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தான்!
இந்த கட்டண முறை காரணமாக பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் #boycottairtel என்ற டேக்கில் அவர் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது வைரல் ஹிட்டாகியுள்ளது இந்த விஷயம். கூடிய சீக்கிரம் ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்க உள்ளனர்.
ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. .
ஏர்டெல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த புதிய வாய்ஸ் கால் பேக்:
75MB டேட்டா இனி 75 ரூபாய் வசூலிக்க உள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த பேக் மூலம் 200-250 நிமிடங்கள் பேசலாம். இந்த பேக் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
3ஜி இணைப்பில் 75MB க்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு 10KBக்கும் 4 பைசா வீதம் வசூலிக்கப்படும்.
2ஜி இணைப்பில் 75MB க்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு 10KBக்கும் 10 பைசா வீதம் வசூலிக்கப்படும்.
இந்த பிளானின் கணக்குப்படி பார்த்தால் 1ஜிபி டேட்டா, 3ஜி சேவையில் 4,000 ரூபாய் வரையிலும், 2ஜி சேவையில் 10,000 ரூபாய் வரையிலும் வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.