ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் ஆகிய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவ் செய்த ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் கட்டணம் வசூல் செய்யும் முடிவை ஏர்டெல் நிறுவனம் திடீரென கைவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க திடீரென நேற்று முடிவு செய்தது.
ஆனால், ஏர்டெல் எடுத்த இந்த முடிவை பலரும் எதிர்பார்க்கவில்லை. உலகெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் பேசி வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாகத்தான் அமைந்தது.
ஏர்டெல் நிறுவனம் தனது புதிய முடிவின்படி வாய்ஸ் கால் பேக் மூலம் 1MB ஒரு என 1ஜிபி டேட்டா, 3ஜி சேவையில் 4,000 ரூபாய் வரையிலும், 2ஜி சேவையில் 10,000 ரூபாய் வரையிலும் வசூலிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று சேர்ந்து டுவிட்டரில் #boycottairtel என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் ஆதங்களை கொட்டி தீர்த்தனர்.
பல வாடிக்கையாளர்கள் உண்மையாகவே ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டை தூக்கி எறிந்துவிட்டு வேறு நிறுவனங்களுக்கு தங்களது சிம்களை மாற்றினர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் மூலம் “ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம்” என்று மெசேஜ்களை மில்லியன்கணக்கில் பார்வர்ட் செய்த வண்ணம் இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏர்டெல் நிறுவனம் தனது முடிவை இன்று திடீரென கைவிடுவதாக அறிவித்துள்ளது.