கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி அருகேயுள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடே கொந்தளித்தது. திருப்பதி உள்பட ஆந்திராவின் பல நகரங்களுக்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் ஓடவில்லை.
இவ்வளவு களேபரத்திற்கு நடுவிலும் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் அதுவும் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு மிக அருகில் படப்பிடிப்பு நடந்தது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதட்டம் எதுவும் இன்றி புலி படத்தின் படப்பிடிப்பு வெகு இயல்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் படத்தின் பட்ஜெட்டை குறைக்கும் பொருட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை கொல்கத்தாவிற்கு பதில் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் திட்டமிட்டதாகவும், ஆனால் அஜீத் கறாராக தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம், என்றும் முதலில் திட்டமிட்டபடியே கொல்கத்தாவிலேயே படப்பிடிப்பை நடத்துங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த செய்தி வெளிவந்ததில் இருந்தே சமூக இணையதளம் ஒன்றில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டு வருகின்றனர். தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் யார்? என்ற கருத்து மோதல் நடந்து வருவதால் அந்த சமூக வலைத்தளம் பரபரப்பாக தற்போது இயங்கி வருகிறது.