அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் அஜீத் 55 திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. முதல்கட்டமாக சென்னை பாண்டிச்சேரி சாலையிலும், இரண்டாவது கட்டமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் படப்பிடிப்பை முடித்த கவுதம் மேனன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்.
சென்னை அண்ணா சாலையில் ஒருவார படப்பிடிப்பு நடத்த சென்னை காவல்துறையினர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பகலில் நடத்தினால் டிராபிக் பிரச்சனை ஏற்படும் என்பதால் இரவில் 11 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா சாலையில் வில்லன் கோஷ்டியினர்களுடன் அஜீத் மற்றும் அனுஷ்கா மோதுவது போன்ற காட்சிகள் படு த்ரில்லிங்காக எடுக்க கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். முதலில் அனுஷ்காவை வில்லன் துரத்துவது போன்றும், அவரை அஜீத் காப்பாற்றுவது போன்ற காட்சிகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் எந்த பகுதியில் எடுப்பது என்பது குறித்த ஆலோசனையில் கவுதம் மேனன் தனது உதவியாளர்களுடன் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இன்னும் 30% படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதால் இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.