சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இப்போதும் கருதப்படம் படம் ‘பாட்ஷா’. கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் போட்டால் கூட பார்ப்பதற்கு என்றே ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என்ற தலைப்பு சமீபத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்புக்கு ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தை தங்கள் நிறுவனமே விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் அதனால், இந்த தலைப்பிற்கு அனுமதி கொடுக்க முடியாது’ என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நக்மா, ரகுவரன் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுரேஷ் கிருஷ்ணாவே இயக்குவார் என்றும் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் பில்லா’ படத்தின் ரீமேக்கில் நடித்த அஜீத்’ இந்த படத்தில் நடிக்கவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.