இரட்டை கோபுர தாக்குதலின் 15 ஆண்டு தினத்தில் அல்கொய்தா மீண்டும் மிரட்டல்
செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத நாள். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிதான் நியூயார்க நகரில் இரட்டை கோபுரங்கள் விமானத்தின் மூலம் தாக்கபட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்நிலையில் இன்றுடன் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகி 15 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ‘இரட்டை கோபுரம் இடித்து தகர்க்கப்பட்டது போன்று ஆயிரம் தடவை தாக்குவோம்’ என அமெரிக்காவுக்கு அல்-கொய்தா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அல்- கொய்தா தீவிரவாத அமைப்பின் புதிய தலைவர் அஸ்மான் அல்-ஜவாரி ‘யூ டியூப்’ இணைய தளத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
‘அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள கிரிமினல் மற்றும் ஊழல் அரசுகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். எங்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் (அமெரிக்கா) ஈடுபட்டு வருகிறீர்கள். அது தொடர்ந்து நடைபெற்றால் இரட்டை கோபுரம் தகர்ப்பு போன்று ஆயிரம் தடவை உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று கூறி அல்-கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் சிரியா, ஈராக் மற்றும் லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்க அமெரிக்கா உதவி வருகிறது. இதற்கு எதிர்பபு தெரிவிக்கும் வகையில் அல-கொய்தா தலைவர் ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார்