அஸ்ஸாம் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் துர்கா பூஜையின் போது அல்கொய்தா உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகய் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அஸ்ஸாமில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அல்கொய்தா தலைவர் இந்தியாவில் கிளை தொடங்கவிருப்பதாக இண்டர்நெட்டில் அறிவித்திருந்தார். அல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பது குறித்து பரவலாக தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், துர்கா பூஜையின்போது அல்கொய்தா தீவிரவாதிகள் அஸ்ஸாமில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் இதனை தெரிவித்த அவர், அஸ்ஸாம் மாநிலத்திற்குள் சாலை மார்க்கமாக நுழைய அல் காய்தா பயங்கரவாதிகள் முயற்சித்துவருவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.
இருப்பினும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிகைகளையும் தமது அரசு மேற்கொண்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
உல்ஃபா இயக்கத்தினருடன் அல் காய்தாவினர் தொடர்பு வைத்துள்ளனரா? என்ற கேள்விக்கு, ” தொடர்பு இருக்கலாம்; தற்போதைக்கு நேரடி தொடர்பு இல்லை என்றபோதிலும், அவர்களுக்குள் தந்திரமான புரிதல் இருக்கிறது…ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை” என்று பதிலளித்தார்.