அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு ஏன்?
ஜல்லிக்கட்டுக்கான தடை அவசர சட்டத்தின் மூலம் நீங்கிய நிலையில் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் திடீரென ஜல்லிக்கட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர். நேற்று மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்த பின்னர் இதை விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஊர் கமிட்டி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இதற்காக போராடிய மாணவர்களும், இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே அறிவித்திருந்த 1-ந்தேதிக்குள் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எங்களால் செய்யமுடியவில்லை. எனவே அந்த தேதியை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளோம். ஜல்லிக்கட்டு எந்த தினத்தில் நடைபெறும் என்பதை கிராம மக்களுடன் கூடி பேசி விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.
இதுசம்பந்தமாக, முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இருக்கிறோம். அவர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இதற்காக ஊர் கமிட்டி நிர்வாகிகள் சென்னை செல்ல உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.