திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், 5.7.15 இரவு நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர்
மதிவாணன் தலைமையில் நடந்தது. குருபகவான் கடக ராசியிலிருந்து, சிம்மராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு, 5ம் தேதி இரவு குருபெயர்ச்சி விழா நடக்கிறது.
இதையொட்டி, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடைபெறும் குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர் மதிவாணன் தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்குமாரசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் சாட்டையா உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.
கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: குருபெயர்ச்சி விழா நடைபெறும் தினத்தில், தீயணைப்பு வாகனங்கள் போதிய தீயணைப்பு வீரர்களுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட வேண்டும், கோவில் பிரகாரத்தில் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு, தக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீஸார் உரிய முறையில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தகவல் மையம் அமைக்கவும், மின்வாரியம் துறையின் மூலம், திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துக்கும், மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,
சுகாதார துறையின் மூலம், குருபெயர்ச்சி நடைபெறும் நாட்களில் ஆலங்குடி, வலங்கைமான்,
நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து
அலுவலர்களும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்கவும், போதுமான மருந்துப் பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.ஆலய வளாகத்தில் நடமாடும் மருத்துவ குழு ஒன்று செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குருபெயர்ச்சி விழாவில் கலந்துகொண்டு, எளிதாக திரும்பி செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
விழாவுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விழா சிறப்பாக நடைபெற உதவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.