தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை. தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தினத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், என அனைத்து நிறுவனங்களும் தேர்தல் தினமான மே 16ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைப்பதால் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் இதுவரை 38 ஆயிரம் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 3,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் ராஜேஸ் லக்கானி தெரிவித்தார். தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.