உலகம் முழுவதும் டெல்டா நிறுவன விமானங்கள் திடீர் நிறுத்தம். ஹேக்கர்கள் கைவரிசையா?
அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப பிரிவு திடீரென செயல் இழந்ததால், உலகம் முழுவதும் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர்.
டெல்டா ஏர்லன்ஸ் நிறுவனத்தின் விமானங்களை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அமைப்பு நேற்று இரவு திடீரென செயலிழந்தது. தொழில்நுட்ப வல்லுனர்களால் எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உலகம் முழுவதிலும் புறப்படுவதற்கு தயாராக இருந்த அந்நிறுவனத்தின் விமானங்கள் நிறுத்தப்பட்டன.
அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் செக்-இன் பகுதியில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருப்பது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டெல்டா ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தபோது, “‘அனைத்து இடங்களிலும் எங்களுடைய தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நேரம் நீடிக்காது என நம்புகிறோம்.’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த நிலைக்கு ஹேக்கிங் முயற்சியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.