ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும். விஜயகாந்த்

vijayakanthதமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஆளும் அதிமுக அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் நேற்று சென்னையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழகத்தில் கொலை, வெட்டு, குத்து, அடிதடி என வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் போக்கு இன்னும் முடிந்தபாடில்லை. இதையே தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாகி உள்ளனர். ஆனால், இவற்றையும் மிஞ்சும் வண்ணம் ஆளும் வர்க்கத்தினர் நடைபெறுகின்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ஆடுகின்ற ஆட்டத்திற்கும், செய்கின்ற வன்முறைக்கும் அளவே இல்லை. அது எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட கூடாது என்ற எண்ணம் ஆளும் வர்க்கத்திற்கு இருக்குமேயானால் எதற்காக தேர்தலை நடத்த வேண்டும்?. ஆளும் வர்க்கத்தை சார்ந்தவர்களையே மாநகராட்சி மேயராகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவராகவும், வார்டு உறுப்பினராகவும் நியமனம் செய்து கொள்ளலாமே?. இல்லை என்றால் ஆளும் வர்க்கத்தினரை தவிர வேறு யாரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது என்று சர்வாதிகார ஆட்சியாளரைப்போல் அறிவித்து இருக்கலாமே?. இது தானாக வந்த தேர்தல் அல்ல ஆளும் வர்க்கத்தினரால் திணிக்கப்பட்ட தேர்தல் என்பதை ஒட்டு மொத்த தமிழக மக்களும் நன்கு அறிவர்.

வேட்புமனு தாக்கலின்போது தடுப்பதும், குண்டர்களை கொண்டு விரட்டி அடிப்பதும், வேட்பு மனுக்களை கிழித்து எறிவதும், வாங்க மறுப்பதும், வேட்புமனு தாக்கல் செய்த இடங்களில் அதிகாரிகளின் துணை உடன் எவ்வித காரணமுமின்றி வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதும், அதன் மூலம் ஆளும் வர்க்கத்தினரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும், அதையும் மீறி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியவற்றின் வேட்பாளர்களை கடத்துவதும், நிர்பந்தப்படுத்துவதும், மிரட்டுவதும் மற்றும் வேட்புமனுவை திரும்பப்பெறச் செய்வதுமென ஆளும் வர்க்கத்தின் அத்துமீறல்களும், முறைகேடுகளும், அளவுகடந்துபோய் மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை நடத்தியுள்ளனர்.

இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் முற்றுகை போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து, அன்றைய தினமே ரத்தும் செய்துவிட்டு மீண்டும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தலை ஏற்கனவே அறிவித்த, அதே செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது தன்னிச்சையானது, சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஆளும் வர்க்கத்திற்கு துணைபோகும் விதமாக மேற்சொன்ன சம்பவங்கள் எதுவுமே தமிழகத்தில் நடைபெறாதது போலவும், நியாயமான, நேர்மையான, ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஆட்சியின் கட்டுப்பாட்டில் மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதைப்போல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறது.

இதுபோலத்தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடுகளும் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, ஆளும் கட்சியின் அத்துமீறல்களுக்கு தமிழக மக்கள் இதையே சான்றாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளவர்களில் ஒரு பாதி பேர், அதாவது 16 அமைச்சர்கள் முகாமிட்டு ஒரு மேயர் தேர்தலுக்கு பணியாற்றுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது. ஒரு அமைச்சரின் முழு பலத்தை கொண்டு தேர்தலை சந்தித்தாலே சமாளிக்க முடியாது. 16 அமைச்சர்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அத்துமீறல்களுக்கும், முறைகேடுகளுக்கும், வன்முறைகளுக்கும் அளவே இருக்காது என்பதை நான் சொல்ல தேவையில்லை. தமிழக மக்களுக்கே நன்றாக தெரியும்.

ஆளும் வர்க்கத்தின் இந்த ஏதேச்சதிகாரமான போக்கை கட்டுப்படுத்த, முறைகேடுகளை முறியடிக்க, அராஜகங்களை தட்டிகேட்க, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்” என்று கூறியுள்ளார். 

Leave a Reply