பொதுவழியை மறித்திருக்கும் வழிப்பாட்டு தலங்களை அகற்றுங்கள். அலகாபாத் நீதிபதிகள் உத்தரவு

பொதுவழியை மறித்திருக்கும் வழிப்பாட்டு தலங்களை அகற்றுங்கள். அலகாபாத் நீதிபதிகள் உத்தரவு

allahabadபொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவழியை மறித்து கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டுத்தலங்களை அகற்றப்பட வேண்டும் என அலகாபாத் நீதிபதிகள் உத்தரவு இட்டிருப்பதால் உத்தரபிரதேசத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மொஹல்லா தவுதா கேரா என்ற பகுதியில் பொது வழியை மறித்து வழிபாட்டுத் தலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த வழிப்பாட்டு தலத்தால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக அந்த வழிபாட்டுத்தலத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அந்த பகுதியை சேர்ந்த 19 பேர் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சுதிர் அகர்வால், ராகேஷ் ஸ்ரீவத்ஸவா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

கடந்த 2011 ஜனவரிக்கு பிறகு பொதுவழி, நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் தனியாருக்கு சொந்தமான வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் பொதுவழியை பயன்படுத்த அடிப்படை உரிமை இருக்கிறது. அதை பறிக்கும் வகையில் சில ஆக்கிரமிப்பாளர்கள் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதத்தின் பெயரால் பொது வழிகள் ஆக்கிரமிக்கப் படுவதை தடுக்க மாநில அரசு உரிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

பொதுவழியிலோ அல்லது பாதையிலோ எந்தவொரு மத வழிபாட்டுத் தலங்களும் வருங் காலத்தில் எழுப்பப்படக்கூடாது. இந்த விதியை மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், போலீஸ் அதிகாரிகளும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.

இது தொடர்பான விரிவான அறிக்கையை 2 மாதங்களுக்குள் தயாரித்து மாநில அரசிடம் மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Reply