ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை. அரசு கொடுத்த வாக்குறுதிகள்
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று கூடிய தமிழ் இளைஞர்களின் கூட்டம் கொந்தளிப்பு கூட்டமாக மாறியது. எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
போராட்டத்தை நிறுத்த காவல்துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் மாபா பாண்டியராஜன் ஆகியோர் இளைஞர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின்போது மாணவர்கள் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
1. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வேண்டும்.
2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.
3. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
4. நாடாளுமன்றத்திலும் குடியரசுத் தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச் சட்டம் கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும்.
5. பீட்டா அமைப்பை குறைந்த பட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்
இந்த ஐந்து கோரிக்கைகளையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.