அலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடலாமா?

alopathi_2392950g

மனிதர்களுடைய நோயைத் தீர்க்கவே அனைத்து வகையான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைச் சாப்பிட்டால் குணம் கிடைக்கும், மற்றொரு மருத்துவ முறையில் தரப்படும் மருந்து வேண்டாம் என்ற மூடநம்பிக்கை தேவையில்லை. இது நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்வது போன்றது. அலோபதி, சித்தா மருந்துகளைச் சேர்த்து உட்கொள்ளலாம். அதனால் கெடுதல் இல்லை.

மனிதனுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கு எது சரியான சிகிச்சை, எந்த மருந்தை உட்கொண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல், பக்கவிளைவுகள் ஏற்படாமல் நோய் பரிபூரணக் குணமடையும் என்பதை முழுமையாக ஆராய்ந்து, ஆலோசித்துத்தான் மருந்துகளை-மருத்துவ முறைகளை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயற்கை மருந்து

சித்த மருத்துவச் சிகிச்சைக்குத் தரப்படும் மூலப் பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாடம் உணவாக உட்கொள்ளும் தாவரப் பொருட்களைக் கொண்டுதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. இதுபோக நீர் வாழ் உயிரினங்கள், தரை வாழ் உயிரினங்கள், பறவைகள் சிலவற்றை ஆராய்ந்து, நஞ்சை நீக்கி மனிதனின் நோய்களுக்குத் தரப்படும் மருந்தாகச் சித்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.

அத்துடன் உலோகங்களைக் கொண்டும், உப ரச, பாஷாணங்களைக் கொண்டும் தேவையற்றதை நீக்கி, தேவையானவற்றைச் சேர்த்து முறைப்படி தயாரித்து வயது, நோயின் தீவிரம், நாள், அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சரியான துணை மருந்துடன் வழங்கி வாழ்நாளை வளமுள்ளதாகச் சித்தர்கள் மாற்றினர்.

மூடநம்பிக்கை வேண்டாம்

நாம் உண்ணும் உணவுப் பொருட்களையே மருந்தாக்கிக் கொடுக்கும் சித்த மருந்துகளை வேறு எந்த மருத்துவ முறையுடனும், மருத்துவர்களின் ஆலோசனையோடும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

அலோபதி மருந்துகளை உட்கொள்ளும்போது சித்த, ஆயுர்வேத மருந்துகளைச் சேர்த்து எடுத்துக்கொள்வதால் எந்தப் பாதிப்பும் வராது. அது மட்டுமல்லாமல், விரைவிலேயே உடல் நலம் பெறும். இப்படிச் சேர்த்து உட்கொண்ட பிறகு கிடைக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் சித்த, ஆயுர்வேத மருந்துகளை மட்டும் உட்கொள்வது குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்கலாம். சித்த, ஆயுர்வேத மருந்துகள் பக்கவிளைவுகளைத் தராதவை.

அது மட்டுமல்லாமல், சித்த மருந்துகளில் உலோகங்களைக் கலக்கிறார்கள் என்பது போன்ற மூடநம்பிக்கைகளையும் கைவிட வேண்டும். சித்த மருந்து தயாரிப்பு முறையை அறிந்துகொண்டால், இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு அவசியமே ஏற்படாது.

– மருத்துவர் எஸ். காமராஜ்

Leave a Reply