கனமழை எதிரொலி: முதல் நாளே அமர்நாத் யாத்திரை திடீர் நிறுத்தம்
ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் புனித யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் நிலையில் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் பனிலிங்க யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் யாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, பஹல்காம் மற்றும் பால்ட்டால் வழிப்பாதையிலான அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
யாத்திரை செல்லும் சாலையில் படிந்துள்ள பாறைகளை அகற்றும்பணியில் மீட்புபணியினர் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் முடிந்த பின்னர் விரைவில் இப்பகுதியில் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது