இனி வரும் காலங்களில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க கேபிள் டி.வி, டிஷ் ஆன்டனா என்று அலைய வேண்டிய தேவையில்லை. கையளவு சாதனத்தில் கடலளவு வீடியோக்களை பார்க்கலாம். இதற்காக, அமேசான் நிறுவனம் அமேசான் டிவி ஸ்டிக் என்னும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிட்டதட்ட ஒரு பென்ட் ரைவ் அளவு உள்ள அந்த சாதனத்தை டி.வி.யின் யுஎஸ்பி போர்ட்டில் இணைத்துவிடலாம். பிறகு அதன்மூலம் ஆயிரக்கணக்கான படங்களையும், டி.வி சேனல்களையும் பார்த்து மகிழலாம். இந்த அமேசான் ஸ்டிக் விரைவில் அமெரிக்க சந்தையை தொடவுள்ளது.
எப்படியிருக்கிறது அன்டார்டிகா
இவ்வளவு நாட்களாக அன்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகள் அனைத்தும் செயற்கைக்கோளின் உதவியோடு தான் நடந்தன. இப்படி செயற்கைக்கோளை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, பனி படர்வு போன்ற காரணங்களால் அன்டார்டிகா பற்றிய விவரங்களை துல்லியமாக அறியமுடியவில்லை. இந் நிலையில் சீ-பெட் என்னும் ரோபோவை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம். 20 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட சீ-பெட் ரோபோ, ராக்கெட்டை போலவே தோற்றமளிக்கிறது இந்த ரோபோ, மிகத்துல்லியமாக 3டி முறையில் அன்டார்டிகாவின் வரைபடத்தை அனுப்பியுள்ளது. மேலும் அன்டார்டிகா கடலில் படர்ந்துள்ள ஐஸ்கட்டிகளின் அடர்த்தி யையும் கணக்கிட்டு வருகிறது சீ-பெட்.
புதிதாக ஒரு ஸ்பை
2008-ம் ஆண்டு முதல் இணைய உலகில் பரபரப்பாக வலம் வந்த ஒரு ஸ்பை வைரஸை சிமேன்டெக் நிறுவனம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. ரெஜின் என்னும் அந்த ஸ்பைவேர், தனியார் பெருநிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள், முக்கிய ஆய்வு நிறுவனங்களை குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளது. மேலும், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் இணையச் சேவை வழங்குநர்களை (Internet service providers) குறிவைத்து இயங்கும் இந்த வைரஸை மேற்கத்திய புலனாய்வு அமைப்பு ஒன்று வடிவமைத்துள்ளது. மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பைவேரை ஆன்டிவேர் துணை கொண்டு கண்டுபிடித்தாலும், அது என்ன வேலை செய்கிறது என்பதை அறிவது மிக கடினமாக இருக்கிறதாம்.
வைப்ரேஷனாகும் வார்த்தை
காது கேளாதவர்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறது வெஸ்ட் (versatile extra-sensory transducer) எனப்படும் புதிய சாதனம். இதன்மூலம் ஒருவர் பேசுவதை அதிர்வாக (வைப்ரேஷன்) மாற்ற முடியும். வாய்பேச முடியாதவர்கள், காது கேளாதவர்கள் தங்களின் மேலாடையில் ஒரு பேட்ஜை போல இதைக் குத்திக்கொள்ளலாம். அதில் உள்ள ஸ்பீச் ரெகக்னைசிங் கருவி வெளியிலிருந்து வரும் சப்தங்களை உள்வாங்கிக்கொள்ளும். பிறகு அந்த சப்தத்துக்கு ஏற்ப அதிர்வலைகளை ஏற்படுத்தும். தற்போது ஆங்கிலத்தில் எட்டிபார்த்திருக்கும் இந்த கருவி, விரைவில் பல மொழிகளிலும் வரவுள்ளதாம்.