தற்போதைய கம்ப்யூட்டர் உலகில் புத்தகம் வாங்கி படிக்கும் வழக்கம் பெரும்பாலானோர்களிடம் இல்லை. அப்படியே புத்தகம் படிக்க வேண்டும் என்றாலும், கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூல e-book முறையில் தாங்கள் விரும்பிய புத்தகங்களை படித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் e-book முறையில் புத்தகம் படிப்பவர்கள் இனிமேல் முழுபுத்தக்கத்திற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒரு புத்தக்கத்தில் எத்தனை பக்கங்கள் படிக்கின்றோமோ அதற்குரிய பணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த புதிய முறையினை அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உதாரணமாக கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை பொன்னியின் செல்வன் இ-புத்தகத்தை டவுன்லோடு செய்வதற்காகக் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரிடமிருந்து பெறும் இந்த தொகையில் இருந்துதான் அமேசான் நிறுவனம் புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு பணம் கொடுக்கிறது. ஆனால் இனிமேல் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு படிக்கும் பக்கத்திற்கு ஏற்ப பணம் கொடுத்தால் போதுமானது என்று அமேசான் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.