லண்டன் : * ‘சார் ப்ளீஸ், கொஞ்சம் விட்டுக்கொடுத்து தான் பேசுங்களேன். அப்ப தான் எங்களுக்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். இல்லேன்னா, எங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்’
* ‘ஓகே, உங்கள் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம். கவலைப்படாதீங்க, அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன்’
இப்படி முதலில் கெஞ்சுவது உலக நாடுகள், அதன் தலைவர்கள். இரண்டாவது பதில் அளித்தது அமெரிக்க அதிபர் ஒபாமா.
அமெரிக்க அரசின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதால் ஏற்பட்டுள்ள திவால் நெருக்கடி, அமெரிக்காவை, அதன் அதிபர் ஒபாமாவை எந்த அளவுக்கு பாதித்ததோ இல்லையோ, கண்டிப்பாக மறைமுகமாக பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ள உலக நாடுகளை கலங்கடித்துள்ளது என்பது தான் உண்மை.
இவ்வளவுக்கும் ஆரம்பம் ஒபாமாவின் கவர்ச்சி திட்டமான எல்லாருக்கும் மருத்துவ காப்பீடு என்ற சலுகை திட்டம் தான். ‘இப்போது எல்லாரும் மருத்துவ காப்பீடு எடுக்கத்தானே செய்கிறார்கள். இப்போது புதிதாக அரசு மானியத்தில் எதற்கு தனி காப்பீடு. இது மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டம் என்று கூறி, எதிர்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள் நிராகரித்து விட்டனர். இதுதான் சண்டைக்கு காரணம். கதவடைப்பை பிரகடனம் செய்தார். விளைவு, ஒபாமாவின் நிர்வாகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் பலவும் மூடப்பட்டன. 8 லட்சம் ஊழியர்கள் தற்காலிக லேஆப் நோட்டீசுடன் வீட்டுக்கு திரும்பினர். இப்படியே 16 நாட்கள் சென்று விட்டன.
இவ்வளவு விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும் ஒபாமா இன்னும் கூட அலட்டிக்கொள்ளவே இல்லை. மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு குடியரசு கட்சி தான் காரணம் என்று கவலையே படாமல் சொல்லியும் வருகிறார்.
இந்த நிலையில், இப்போது ஒபாமா , குடியரசு கட்சியுடன் பேச முன்வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை குடியரசு கட்சி , ஜனநாயக கட்சி எம்பிக்கள் குழுக்கள் பேசி விட்டன. தொடர்ந்து பேச்சு நடந்தும் வருகிறது.
பேச்சில் எப்படியாவது சுமுக முடிவு ஏற்பட வேண்டும் என்று பிரார்த்திப்பது யார் தெரியுமா? ஒபாமா என்றா நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இல்லை. உலக நாடுகள். இதில் சீனா, இந்தியாவும் அடக்கம். ‘ப்ளீஸ் பிரச்னையை பேசி முடியுங்கள்’ என்று வேண்டி வருகின்றன.
கடனில் மூழ்கும் நிலை பற்றி அமெரிக்காவே கவலைப்படவில்லை; மற்ற நாடுகள் ஏன் கவலைப்பட வேண்டும்? எல்லாம் டாலர் செய்யும் மாயம்.
ஆம், அமெரிக்க ‘ஷட்டவுன்’ பிரச்னையால் டாலர் கரன்சிக்கு எதுவும் ஆகி விடக்கூடாது; அப்படி டாலருக்கு சிக்கல் வந்தால் தங்களுக்கு பெரும் இழப்பு என்று இவர்கள் அலறுகின்றனர்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
* உலக கரன்சிக்களில் அமெரிக்க டாலருக்கு தான் அதிக செல்வாக்கு. அதன் மதிப்பு தான் மிக அதிகம். அதன் மதிப்பை வைத்து தான் மற்ற கரன்சிக்களின் மதிப்பு உள்ளது.
* உலகில் உள்ள நாடுகளில் எந்த கரன்சியை வைத்திருந்தாலும், டாலரில் பணமாகவோ, பங்கு பத்திரமாகவோ, கடன் பத்திரமாகவோ வைத்திருப்பது தான் அதிக லாபம் கொண்டது; வருவாய் ஈட்டுவது.
* எந்த பொருளும் டாலரில் விற்கப்படும் போது தான், ஏற்றுமதி செய்யப்படும் போது தான் அதிக லாபத்தை ஈட்டித்தருகிறது.
இது தான் காரணம். உலகில் பல நாடுகளும் தங்கள் நாட்டு நிறுவனங்களின் பங்கு பத்திரங்களை டாலரில் விற்கும் போது தான் கொழிக்க முடிகிறது. பல நாடுகளில் தங்கள் பணத்தை போட்டு டெபாசிட் செய்து பத்திரங்களாக வைத்திருப்பது டாலரில் தான்.
இப்படிப்பட்ட டாலருக்கு எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்று பல நாடுகளும் புலம்புவது சரி தானே. இந்த நாடுகள் கோரிக்கையால் தான் தங்கள் அரசியல் பிரச்னையை இத்துடன் தீர்த்துக்கொள்ளலாமா என்று குடியரசு , ஜனநாயக கட்சிகள் சற்று இறங்கி வந்துள்ளன.
விரைவில் அமெரிக்க ‘ஷட்டவுன்’ பிரச்னை முடிவுக்கு வராவிட்டால், பல நாடுகளின் கரன்சிகளுக்கும் கூட ஆபத்து வரும் என்று ஏழை நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் அமெரிக்க பிரச்னை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
ஆபத்து மற்றவர்களுக்கு தான்…
* கரன்சி சேமிப்பால் அதன் மதிப்பு அதிகரிக்கும் என்று நினைப்பது தவறு. ஏற்றுமதி, பொருளாதார உற்பத்தி போன்றவை முக்கியம். அதற்கு டாலர் கைகொடுப்பது முக்கியம். அதனால் டாலரை பல நாடுகளும் சுற்றி வருகின்றன.
* சீனாவின் பல லட்சம் கோடி பங்கு பத்திரங்கள் மட்டுமல்ல, பொருட்கள் விற்பனையும் டாலரை நம்பி தான். அது அலறுவதற்கும், அமெரிக்காவை கண்டு மவுனம் சாதிப்பதற்கும் இது தான் காரணம்.
* மற்ற நாட்டு கரன்சியை மதிப்பு குறைய செய்ய அமெரிக்காவால் முடியும். ஆனால், டாலரை வேண்டாம் என்று சொல்லவோ, அதன் மதிப்பை குறைக்கவோ எந்த நாட்டாலும் முடியாது.
* ஷட்டவுன் காரணமாக ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அதிபர் ஒபாமா நிராகரித்தால் அதனால் அமெரிக்காவில் நிர்வாக குழப்பம் வரலாம். ஆனால், மற்ற நாடுகளுக்கு வர்த்தக, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.
* அமெரிக்க பிரச்னை டாலரை பாதித்தால் அதனால் ஆபத்து நமக்கு தான் என்கிறார் நம் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன்.
* ‘டாலருக்கு பிரச்னை என்றால் அதனால் பெரும் இடைவெளி ஏற்பட்டு விடும். பாதுகாப்பான நிதி சொர்க்கம் எது என்ற தெளிவில்லாத நிலை ஏற்படும்’ என்று சிங்கப்பூர் நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
* அமெரிக்கா உடனே பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரும் நிதி சிக்கல் ஏற்படும் என்று சீன துணை நிதி அமைச்சர் ஜூ குவாங்க்யோ கூறுகிறார்.