சிலைகளை சேதப்படுத்துபவர்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை

சிலைகளை சேதப்படுத்துபவர்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் திரிபுரா உள்பட எந்த மாநிலத்திலும் தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கடும் எச்சரிக்கை ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக திரிபுராவில் வெற்றி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் அங்குள்ள பாஜகவினர் சிலர் லெனின் சிலையை அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார். எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாரத பிரதமர் மோடி தலைவர்களின் சிலை அகற்றப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்ததோடு உடனடியா மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனையடுத்து மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனிடையே பாஜக தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடும் பாஜகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், சிலை உடைப்பு சமபவங்கள் தொடர்பாக தமிழகம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள பாஜக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply