பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராஜ்நாத் சிங் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்க டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் புதிய தலைவராக அமித் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் கூறினார்.
தற்போதைய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய மந்திரியாக இருப்பதால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் கொள்கையின்படி, அவர் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக செயலாற்றிய அமித் ஷாவுக்கான பரிசாகவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மிக நெருங்கிய நண்பராகவும் அமித் ஷா திகழ்வதாலும் அவருக்கு இந்த பொறுப்பை பெற்றுத் தருவதில் மோடி ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.