பாஜக ஆட்சியை குறை சொல்வதை விட்டுவிட்டு ராகுல்காந்தியை தேடுங்கள். காங்கிரஸுக்கு அமீத் ஷா அறிவுரை

bjpபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று பெங்களூரில் மிக பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீத் ஷா பேசியதாவது:

”மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 10 மாதங்களில் ஒளிவுமறைவற்ற ஆட்சி முறை அமலுக்கு வந்துள்ளது. கொள்கை முடிவுகளை எடுப்பதில் தேக்கநிலை ஏற்படவில்லை. அமைச்சர்களும் சுயமாக முடிவெடுக்கிறார்கள். அவசியம் ஏற்பட்டால், பிரதமரின் ஆலோசனையைப் பெறுகிறார்கள்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தேக்கநிலை காணப்பட்டது. மேலும், ஊழல்கள் மலிந்திருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரிச் சுரங்க ஏலம், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், மத்திய அரசு அண்மையில் நடத்திய நிலக்கரி ஏலத்தில் அரசுக் கருவூலத்திற்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல, அலைக்கற்றை ஏலத்தில் ரூ.1.09 லட்சம் கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது.

Embedded image permalink

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விரக்திக்குத் தள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலுவான விமர்சனங்களை எடுத்து வைக்க முடியாததால், கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. பா.ஜ.க.வைக் குறை கூறுவதற்கு முன்பாக தங்கள் தலைவர் ராகுல் காந்தி எங்கிருக்கிறார் என்பதில் காங்கிரஸ் ஆர்வம் காட்ட வேண்டும். பா.ஜ.க. அரசுக்கு எதிராக வெற்று குற்றச் சாட்டுகளைக் கூறி வருவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கிராமங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், இந்தியாவில் திறன், வேலைவாய்ப்புத் திட்டங்கள், மக்கள் நிதித் திட்டம், முன்மாதிரி நகரத் திட்டம், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம், சுய வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Embedded image permalink

இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை அகன்றுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. வெளிநாடுகளுடனான உறவு மேம்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்கும் அளவுக்கு மோடியின் மதிப்பு உலகளவில் உயர்ந்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிலவிய ஊழலுக்கு, பா.ஜ.க. அரசு முடிவுகட்டிவிட்டது. தற்போது எந்த இடத்திலும் ஊழல் நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். மோடி ஆட்சியில் இந்தியாவின் தோற்றம் முழுமையாக மாறப்போகிறது” என்றார்.

Leave a Reply