இன்று முதல் தமிழகம் முழுவதும் அம்மா சிமெண்ட் விற்பனை ஆரம்பம்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5ஆம் தேதி முதல் திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா சிமெண்ட் ஐந்தே நாட்களில் ஐந்து லட்சம் கிலோ சிமெண்ட் விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில், அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டம் கடந்த 5-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம், 1,500 சதுர அடி வரை கட்டுவோருக்கு, 50 கிலோ அடங்கிய மூட்டை 190 ரூபாய் வீதம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஆகிய அரசு நிறுவனங்கள் இணைந்து, தமிழ்நாடு சிமென்ட் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி இந்த திட்டம் அறிமுகமானது.
இந்நிலையில், இன்று முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா சிமென்ட் விற்பனை விரிவுபடுத்தப் படுகிறது.
அம்மா சிமெண்ட் விற்பனையின் மேற்பார்வை பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.