சென்னை மாநகராட்சி சார்பில் “அம்மா’ மருத்துவக் கல்லூரி நடத்த வேண்டும் என்று சட்டசபையில் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று கோரிக்கை ஒன்றை முன்வைத்து பேசினார்.
சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய செ.கு.தமிழரசன்:
சென்னை மாநகராட்சி, இந்திய அளவில் முதலாவதாகவும், உலக அளவில் இரண்டாவதாகவும் சிறந்து விளங்குகிறது. நாட்டின் பல மாநகராட்சிகளின் சார்பில் மருத்துவக் கல்லூரிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதைப்போல சென்னை மாநகராட்சி சார்பிலும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைத்து அதற்கு அம்மா மருத்துவக்கல்லூரி என்று பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் சென்னை தண்டையார்பேட்டை மருத்துவனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று பலன் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு புதிய மருத்துவமனையை கட்டி அதற்கு ‘அம்மா மருத்துவ கல்லூரி என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.