தமிழ்நாடு முதலமைச்சரின் அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், அம்மா காயகறிக்கடை, அம்மா உப்பு ஆகிய திட்டங்கள் பெருவாரியான மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில் நாளை முதல் அம்மா மருந்தகங்கள் ஆரம்பமாக உள்ளன. இந்த மருந்தகங்களில் அனைத்து நோய்களுக்குமான மருந்துகள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதால், ஏழை எளியோர் மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13–ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று, தற்போது அந்த திட்டம் நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது.
தலைமைச்செயலகத்தில் இருந்து நாளை அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் 20 இடங்களிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 80 இடங்களிலும் அம்மா மருந்தகங்கள் ஆரம்பமாகவுள்ளன.