அம்மணி. திரைவிமர்சனம்
அம்மணி (சுப்பலட்சுமி) பாட்டி குப்பைகளைப் சேகரித்து அதை விற்று சாப்பிடும் கடின உழைப்பாளி. அவருக்கு என எந்த சொந்தமும் கிடையாது. அவர் சாலம்மா (லட்சுமி ராமகிருஷ்ணன்) வீட்டில் குடியிருக்கிறார். சாலம்மாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் ஒரு குடிநோயாளி, இரண்டாவது மகன் ஆட்டோ ஓட்டுநர், மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தன் மகனை லட்சுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். லட்சுமி ஒரு அரசு மருத்துவமனையில் துப்புறவு பணியாளராக வேலை செய்கிறார். சீக்கிரமே ஓய்வு பெறவும் போகிறார். இரண்டு மகன்கள், பேரன் மூவரும் குறி வைத்திருப்பது லட்சுமியின் ஓய்வூதியப் பணத்துக்கு. அந்தப் பணப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, கடன் பிரச்சனை எனப் பல பிரச்சனைகள் லட்சுமியை சுழற்றியடிக்கிறது. இதை எப்படி லட்சுமி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
டைட்டில் கேரக்டர் சுப்பலட்சுமிக்கு தான் என்றாலும், கதை லட்சுமி ராமகிருஷ்ணனைச் சுற்றி தான் இருக்கிறது. மகன்களுடன் சண்டை போட்டுவிட்டு ‘இவனுங்களுக்காக தான எல்லாமே செஞ்சேன்’ என விரக்தியடைவதும், என்னோட சாவு எப்பிடி இருக்கும் தெரியுமா என கனவில் ஒப்பாரிப்பாட்டுக்குப் போவதும் என வழக்கம் போல குணச்சித்திர நடிப்பை சிறப்பாகவே வழங்கியிருக்கிறார் லட்சுமி. அம்மணியாக வரும் சுப்பலட்சுமி பாட்டிக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் படத்தின் முக்கியமான பல காட்சிகளில் வந்து நன்றாக நடித்தும் இருக்கிறார்.
கே இசையில் பாடல்களை விட பின்னணி இசை நன்று. இம்ரான் அஹமத் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட் படம் என்கிற உணர்வை எழவிடாமல் உழைத்திருக்கிறது. இன்னொரு ப்ளஸ் படத்தொகுப்பு. மிகவும் வறட்சியான கதையை எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு சுருக்கமாக சொல்லியிருக்கிறார் எடிட்டர் ரெஜித்.
’என்னடா இது படம் சீரியல் மாதிரி இருக்கு’ என நினைக்கும் பொழுது, லட்சுமி ராமகிருஷ்ணன் எடுக்கும் அந்த முடிவு திகீர்.
1.தன் பெற்றோரைக் காப்பாற்றுவது பிள்ளைகளின் பொறுப்பு,
2.மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் வாழ்வை சந்தோஷமாக வாழு என இரண்டு மெசேஜ்களை இரண்டு அம்மணி, சாலாம்மா என்ற இரு கதாப்பாத்திரங்கள் வழியாக படத்தில் சொல்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.