அழகிரியோடு தொடர்பு வைத்தால் கடும் நடவடிக்கை. க.அன்பழகன் எச்சரிக்கை

xanbazhagan_1758510h.jpg.pagespeed.ic.P5ZEA6LouPதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் மு.க.அழகிரியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் மீறி தொடர்பு வைப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை க.அன்பழகன் விடுத்த அறிக்கையின் முழுவிபரம்:
அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்ந்து வரும் கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் அதை என்றைக்கும் கழகத்தின் தலைமை பொறுத்துக் கொள்ளாது என்பதைக் கடந்தகால கழக வரலாற்றை தெரிந்தவர்கள் உணர்வார்கள்.

இன்றையச் சூழ்நிலையில் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேச சந்திப்பு என்ற பெயரில் ஆங்காங்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்து, கழகத் தோழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செய்தி தலைமைக் கழகத்திற்குக் கிடைத்து வருகிறது.

திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் கழகத் தோழர்கள் யாரும், எந்தப் பொறுப்பில் உள்ளவர்களாயினும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வறிக்கையை மீறி கழக உறுப்பினர் எவரும் செயல்படுவதாக தலைமைக்குத் தகவல் வருமேயானால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

க.அன்பழகனின் இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்ட திமுகவினர் பலர் அழகிரியோடு ரகசியமாகவும், வெளிப்படையாகவும், தொடர்பு வைத்துக்கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக வந்த தகவலை அடுத்து அன்பழகன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Leave a Reply