வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பாமக கட்சியின் முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், இனி வருங்காலத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
நேற்று திருப்பூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘2016 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மது, ஊழல் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்போம். முதல்வர் பதவியில் பாமக என்ன செய்யும் என்பது குறித்து பல்வேறு திட்டங்கள் உள்ளன. பாமக ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கில் முதல் கையெழுத்திடுவோம். கல்வி, வேளாண்மை, சுகாதாரம், வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். தேவையற்ற இலவசங்களைத் தவிர்ப்போம்.
‘கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம். இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும்’ என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதை, இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர, பாமக தொடர்ந்து போராடி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் நிர்வாகமே இல்லை. ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட அமைச்சர்கள் கோயிலில்தான் இருக்கிறார்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம். 50 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அன்புமணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.