மழையை சாட்டிலைட்டை பார்த்து கணிக்காமல் வானத்தை பார்த்து கணிக்கிறார் ரமணன். அன்புமணி
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், தற்போது அனைவரின் கவனமும் ரமணன் கூறும் வானிலை அறிக்கையில்தான் உள்ளது. மழை வருமா? என்பது குறித்து தெரிந்து கொள்ள அவர் கூறும் அறிக்கையை தெரிந்து கொள்ள அனைவரும் முன்வருகின்றனர்.
இந்நிலையில் ரமணனின் வானிலை அறிக்கையை பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறியதாவது:
“நியூயார்க் நகரத்தில் நான் பார்த்து இருக்கிறேன். அமெரிக்காவில் நியூயார்க், புருக்ளீன், மன்ஹட்டன், குயின்ஸ்ப்ரோ என பல பகுதிகள் இருக்கிறது. இந்த பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன்பே மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி ஒரு வாரம் கழித்து மழை பெய்யும். தொலைக்காட்சிகளில் அறிக்கைகள் வெளியிடப்படும்.
ஆனால், இங்கே (தமிழ்நாட்டில்) நம்முடைய ரமணன் இருக்கிறார். மழை பெய்து அடித்து முடித்த பிறகு சொல்லுவார். சென்னையிலே பரவலாக மழை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமான மழை, பலமான மழை என்று. இது என்வென்று எனக்கு புரியவில்லை.
இதில் என்ன விஞ்ஞானம் இருக்கிறது. நான் நினைக்கிறேன், ரமணன் தினமும் வீட்டுக்கு வெளியே போய் வானத்தை பார்த்து விட்டு ஓகே, ‘இன்றைக்கு மழை பெய்யும், இன்றைக்கு வெயில் அடிக்கும்’ என கணிக்கிறார். அத்தகைய தொழில் நுட்பத்தைதான் இங்கே வைத்திருக்கிறோம். இங்கு சாட்டிலைட் கிடையாது, ஒண்ணும் கிடையாது. வெளிநாட்டில் இருக்கிற தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வர வேண்டும். விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது. பருவமழை எப்போது வரும், எந்த சீசனில் வரும், எங்கிருந்து வரும், எப்படி வரும் இதையெல்லாம் சுலபமாக மற்ற நாடுகளில் சொல்வதை பார்த்து விட்டு வருகிறோம்.
அந்த தொழில் நுட்ப முன்னேற்றங்களை இங்கே கொண்டு வரணும். ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும் வரைக்கும் வராது”
இவ்வாறு அன்புமணி கூறினார்