தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8,000 கொலைகளும் 85,000 கொள்ளைச் சம்பவங்களும் 5,000 பாலியல் குற்றங்களும் நடந்துள்ளன என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை மருத்துவக்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அன்புமணி, ‘தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை. இதனால் காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்து வருகிறோம். மேகேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாகிவிடும். ஏறத்தாழ 5 கோடி பேர் குடிநீருக்கு அவதியுறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்தித்து முறையிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாவார் என கருதி, தமிழகம் முழுவதும் 400 புதிய அரசுப் பேருந்துகளை இயக்காமல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல, சென்னை மெட்ரோ ரயில் பணி முடிந்த நிலையிலும், கடந்த 6 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலேயே நிர்வாகத்தில் மோசமான மாநிலமாக இருந்த பீகாரை தற்போது தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டது”
இவ்வாறு டாக்டர் அன்புமணி பேசினார்.