20 அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் என்கவுண்டர் செய்தது தொடர்பாக உண்மையை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து அந்த குழுவை ஆந்திராவிற்கு விரைவில் அனுப்பவுள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
இது குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
“ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் காக்கைக் குருவிகளைப் போல சுட்டு படுகொலை செய்திருக்கின்றனர்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ள இந்த படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உண்மை கண்டறியும் குழுவை ஆந்திராவுக்கு அனுப்ப பாமக முடிவு செய்துள்ளது. இக்குழு விரைவில் ஆந்திராவுக்கு சென்றும், கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தும் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து கட்சி தலைமையிடம் அறிக்கை அளிக்கும்.
அதனடிப்படையில் இப்படுகொலைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர பாமக திட்டமிட்டுள்ளது. இதுதவிர மனித உரிமை ஆணையத்திடமும் முறையிடப்படும்.
அது மட்டுமின்றி, எந்த குற்றமும் செய்யாமல் ஆந்திர சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை விடுவிக்கவும், அவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 20 தமிழர்களின் படுகொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தும்படி குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி இதற்கான உத்தரவைப் பெறவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.