பெண்களை திரட்டி மதுக்கடைகளை மூடுவோம். தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

anbumaniதமிழகத்தில் மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி மதுக்கடைகளை மூட வைப்போம் என பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் மகனும், பாமகவின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் நேற்று தருமபுரியில் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நேற்று தருமபுரியில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்துவோம். ஆர்ப்பாட்டம் மூலம் வலியுறுத்தும் கருத்தை அரசு ஏற்காவிட்டால் பெண்கள் திரண்டு வந்து மதுக் கடைகளை மூடுவர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக கிராம பெண்கள் பலர் மேடை யேறி பேசினார்கள். மது அரக்கனால் அவர்களின் குடும்பங்களில் நிகழ்ந்த இழப்புகள், அதன் தொடர்ச்சியாக அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்ட அவல நிலை உள்ளிட்ட வேதனைகளை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். குஜராத், கேரளா மாநிலங்களில் சாத்தியப்படும் செயலை தமிழகத்தில் மட்டும் ஏன் நிறைவேற்ற முடியாது.

இந்தியாவிலேயே அதிக மது விற்பனை நடக்கும் மாநிலம் தமிழகம்தான். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசு, அந்தக் கடமைகளை முற்றிலும் மறந்து விட்டது. அதற்கு மாறாக மது விற்பதை தலையாய கடமையாக நினைத்து செயல்படுகிறது. மதுவால் தமிழகத்தில் சாலை விபத்து, தற்கொலை, இளம் விதவைகள் உருவாக்கம் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் மணல் மற்றும் தாதுமணல் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளும் வெளி வரும். இந்த மணல் தொழிலை அரசு கையில் எடுத்து ஒழுங்குபடுத்தினால் மதுவை விட அதிக வருவாய் அரசுக்கு கிடைக்கும். கிரானைட் கொள்ளை விவகாரம் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் அதிக அளவு நடந்துள்ளது. எனவே சகாயம் குழு விசாரணை நடத்த வேண்டும்

மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தை எதிர்க்க தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இதிலும் கவுரவம் பார்த்துக்கொண்டு நின்றால் கர்நாடகா எளிதாக அணையை கட்டு முடித்து விடும். பின்னர் மேட்டூர் அணைக்கு சொட்டு நீர் கூட கிடைக்காது. டெல்டா மாவட்டம் வறண்டு விவசாயம் அழியும். 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும். எனவே நம் அரசியல் கலாச்சாரத்தை மாற்றிக்கொண்டு ஓர் அணியில் திரண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழித்துவிட்டு கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகிய 4 துறைகள் மீது மட்டும் தீவிர கவனம் செலுத்தும். கட்டணமில்லா, கட்டாய, சுமை யில்லா, சமச்சீர் கல்வியை அளிப்போம். மேம்பட்ட தரத்துடன் சுகாதார சேவைகளை வழங்குவோம். நீராதாரங்களில் 5 கி.மீட்ட ருக்கு ஒன்று வீதம் நாடு முழுக்க தடுப்பணைகளை பெருக்குவோம். சுய வேலைவாய்ப்பு பெருகும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply