தேசிய நெடுஞ்சாலையில் அன்புமணி ஆடிப்பாடும் குறும்படத்தின் படப்பிடிப்பு.
பாமகவின் இளைஞரணி தலைவரும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் அக்கட்சி தயாரிக்கும் குறும்படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடிப்பாடி நடித்துள்ளார்.
டாஸ்மாக்கை மூட வேண்டும் என பாட்டாளி மக்கள் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் நான் முதலமைச்சரானால் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமலுக்குத்தான் என்று அடிக்கடி அன்புமணி கூறிவருகிறார்.
இந்நிலையில், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பாமக ஒரு விழிப்புணர்வு பிரச்சார குறும்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த குறும்படத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை குறித்து ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு சேலம் ஐந்துரோடு அருகே ஏ.வி.ஆர் ரவுண்டானா, ரெட்டிப்பட்டி பாலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்புமணி ராமதாஸ் ஆடிப்படியவாறு மதுவின் தீமைகளை விளக்குவது போன்றும் அவருடன் ஏராளமான பெண்களும் நடித்துள்ளதாகௌம் பாமக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த படப்பிடிப்பை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.