எதிர்க்கட்சி தலைவராக சாதிக்காதவர் முதல்வராக எப்படி சாதிப்பார். விஜயகாந்த்துக்கு அன்புமணி கேள்வி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தமிழக அரசியல் களம் சூடிபிடித்திருக்கும் நிலையில் தேமுதிக தலைவரின் தனித்து போட்டி அறிவிப்பால் இன்னும் கூடுதலாக பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, திமுக-அதிமுக குறித்தும், தேமுதிகவின் தனித்து போட்டி கருத்து குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
*கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திமுக விட்டு சென்ற நிர்வாகக் கடன் ரூ.1.05 லட்சம் கோடியாகும். இப்போது 5 ஆண்டுகளின் முடிவில் தமிழகத்தின் நிர்வாகக் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாகும். அதிமுக ஆட்சியில் மட்டும் ரூ.1.47 லட்சம் கோடியாக நிர்வாகக் கடன் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றால் மக்கள் அதிமுக மீது கோபத்தில் உள்ளனர்.
*திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். 66 வயதுள்ள திமுக தனியே போட்டியிட நம்பிக்கை மற்றும் தைரியமில்லாத கட்சியாக உள்ளது. கூட்டணிக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. திமுக மூழ்குகிற கப்பல், அதில் யார் ஏறினாலும் அவர்களும் மூழ்கிவிடுவார்கள்.
*அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே வேண்டாம் என்று 90 சதவீத மக்கள் விரும்புகிறார்கள். மாற்றம் பாமக மூலம் வரும் என இளைஞர்கள் நம்புகிறார்கள். தமிழகம் முழுவதும் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த ஆதரவு பொதுமக்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்களிடம் இருந்து வருகிறது.
*தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமகவோடு சேர மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளே பெரிய கட்சிகள் என அவரே அங்கீகரித்துக் கூறியுள்ளார்.
*எங்களைப் பொருத்தவரையில் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். கூட்டணி அவசியம் இல்லை என்று கருதுகிறோம். திமுக போல பிற கட்சிகளை கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றிக் கட்சிதான் இறுதி முடிவெடுக்கும்.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக எதையும் சாதிக்க முடியவில்லை. முதல்வராக மட்டும் எப்படிச் செயல்படுவார். தேமுதிக மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும். இவ்வாறு அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார்
Chennai today news: Anbumani slams Vijayakanth