அன்புமணியின் அராஜக அறிவிப்பு. பொதுமக்கள் அதிருப்தி
234 தொகுதிகளிலும் வேட்பாளரை அறிவித்து, முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களத்தில் இறக்கியுள்ள பாமக தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் இந்த தேர்தலில் பாமகவுக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பல தடலாடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு என்ன தெரியுமா? தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். மீறினால் ரேஷன் கார்டு பறிக்கப்படும் என்பதுதான். அன்புமணியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி எந்த பள்ளியில், எந்த கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. இதில் அரசு உள்பட யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் அளவுக்கு தரமாக இருந்தால் கண்டிப்பாக அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வைக்க தயங்குவது இல்லை. ஆனால் அதே நேரத்தில் அராஜகமாக அரசு பள்ளியில் சேர்க்காவிட்டால் ரேஷன் கார்டை பிடுங்குவேன் என்று கூறுவதெல்லாம் அராஜகத்தின் உச்சக்கட்டம் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் மாற்றம் மாற்றம் என்று கூறும் அன்புமணியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதிலும் அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். அன்புமணி, அரவிந்த் கெஜ்ரிவால் போல் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் வந்தவர் அல்ல. ஜாதி கட்சி, இரண்டு திராவிட கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டணி வைத்து பதவி சுகத்தை பெற்ற கட்சிதான் என்று பெயர் வாங்கியுள்ள கட்சியில் இருந்து வரும் அன்புமணியை மாற்றம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை என்று கூறப்படுகிறது.