அமேசான் காடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் யார்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பாகவே, அமேசான் காடுகளில் அங்கிருந்த பூர்வ குடி மக்கள் ஏராளமான மரங்களை நட்டு பாதுகாத்துள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, அமேசான் காடுகளை வளர்த்தெடுக்க முதன்மை காரணம் யார் என, ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில், அமேசான் காடுகளில் பெரும்பகுதி பூர்வீக மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்றும், மற்ற பகுதியை காட்டிலும், அமேசானில் எந்த விதையை போட்டாலும், ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் வளரும் என்றும் தெரியவந்துள்ளது.
இதன்படி, நிலக்கடலை, முந்திரி, ரப்பர் மட்டுமின்றி, பலவிதமான மரங்களை அங்கு வசித்து வரும் பூர்வீக மக்கள், 600 ஆண்டுகளாக நட்டு வருகின்றனர். இதுவே, அமேசான் காடு, நாளுக்கு நாள் விரிவடைந்து போக முதன்மை காரணமாகும்.
ஐரோப்பியர்களின் குடியேற்றம் அமேசான் பகுதியில் நிகழ்வதற்கு முன்பாகவே, அங்கிருந்த பூர்விகக் குடியினர், அந்த வனப்பகுதியை தங்களின் முக்கிய ஜீவாதாரமாகக் கருதி, பாதுகாத்துள்ளதாகவும், அந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.
இதற்காக, அமேசானில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மரங்களின் தன்மை பற்றி ஆய்வு செய்துள்ளதாகவும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.