மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.
இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.
மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!
”வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்” என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:
”ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்…
சிந்துரச் செம்பொடிப்போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று
மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான்
சுழலையினின் றுய்துங்கொலோ
-எனப் பாடி, ‘நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?
பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கென்செய்வதே?
-என அங்கு வாழும் பறவைகளிடம் ‘அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!” என்று விவரித்தவர், அடுத்து ‘நாறு நறும்பொழில்மா…’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.
நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று
வந்திவை கொள்ளுங் கொலோ!
-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.
இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.
‘இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்” என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.
நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.