அந்தமான் படகுவிபத்து – 21 பேர் பலி

அந்தமானில் நடந்த படகுவிபத்து ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உள்பட 21 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த வியாழக்கிழமை 32 பேர் சுற்றுலாவுக்காக சென்றனர். கடந்த வியாழக்கிழமை சென்ற அவர்கள் அந்தமானில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு ரோஸ் தீவு என்ற இடத்திற்கு படகு மூலம் சென்றுள்ளனர். அந்த படகில் மொத்தம் 46 பேர் பயணம் செய்துள்ளனர். படகு கடலில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பலத்த காற்றினால் படகு கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் அனைவரும் மூழ்கினர்.  கடலில் மூழ்கியவர்களில் 23 பேர்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியான 21 பேர்களில் 18 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேர்களின் உடலை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

விபத்தில் பலியான 21 பேர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். படகு விபத்தில் தப்பிய எஞ்சிய தமிழர்கள் இன்று சென்னை வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரவர்களின் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அந்தமான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தவிபத்து குறித்து நீதி விசாரணை செய்ய அந்தமான் அரசு உத்தரவிட்டுள்ளது. வெறும் 25 பேர்கள் செல்லக்கூடிய படகில் 46 பேர்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply