கனமழைக்கு காரணம் திருப்பதியில் நடந்த யாகமா? ஆந்திர கவர்னர் பேட்டி
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை அறிக்கை ஒருபுறம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மழைக்கு திருப்பதி கோவிலில் நடத்திய யாகமே காரணம் என ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்மன் கூறியுள்ளார்.
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த புஷ்பயாகத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் கலந்து கொண்டார். கொட்டும் மழையிலும் 7 டன் மலர்களால் மலையப்பசாமிக்கு யாகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நரசிம்மன், “மழை இல்லாமல் திருமலையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டிருந்தன. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்தது. இந்த நேரத்தில்தான் கோவிலில் சமீபத்தில் மழைக்காக யாகம் நடத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழைக்கு இந்த யாகமே காரணம். சுவாமியின் கருணையால்தான் இந்த மழை கிடைத்து உள்ளது. பக்தர்களின் வேண்டுதலை பகவான் தீர்த்து வைத்து உள்ளார்” என்று கூறினார்.
இந்த கனமழையால் ஆந்திராவில் உள்ள மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் மூழ்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதம் அடைந்தன. இந்த சேதத்திற்கு திருப்பதி ஏழுமலையான் தான் காரணமா? என டுவிட்டரில் பலர் ஆந்திர கவர்னருக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.