விஜயகாந்தை அடுத்து பத்திரிகையாளர்களை மிரட்டிய ஆந்திர முதல்வர்
ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகையாளர்கள் முன் ‘தூ’வென துப்பியதோடு அவர்களை தரக்குறைவாக பேசி வாங்கி கட்டிக்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஒங்கோல் ராயவரம் என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள வந்தார். அவர் வரும் வழியில் செய்தியாளர்கள் தங்களின் சுகாதார அட்டைக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி கோரிக்கை அடங்கிய பதாதைகளை தூக்கி பிடித்தப்படி நின்றனர். இதை பார்த்து ஆவேசம் அடைந்த சந்திரபாபு நாயுடு, ”அட்டையை காட்டினால் நான் பயந்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருக்கும் இந்த கூட்டத்தில் 10 பேர் நின்று கொண்டு ரகளை செய்வதா? செய்தியாளர்கள் பொறுப்புடனும், நாகரீகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் என்னை பற்றி உங்களுக்கு தெரியாது. என்னை மிரட்ட நினைத்தால் மிரண்டுவிடுவேன் என்று நினைக்காதீர்கள். நான் பயப்படமாட்டேன். தீவிரவாதிகள்போல் நடந்து கொள்ளாதீர்கள். நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கடுமையாக பேசினார். இதனால் செய்தியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
https://www.youtube.com/watch?v=0ve8peRvL5g
Chennai Today News: Andhra Pradesh CM Chandrababu Naidu warns Journalists