ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அருகேயுள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஆந்திர போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு ஆந்திர பிரதேச அரசுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள் தொடர்ந்த வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக இன்று முனியம்மாள் ஆந்திர நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில் விசாரணையின் போது, முனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த என்கவுன்டர் குறித்து சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆந்திர அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் விவரம் குறித்து தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர் விவரங்களை நாளை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.