நேற்று தென்கொரியாவில் 470 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்த பயங்கர விபத்தில் இதுவரை 164 பேர்கள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 100 பள்ளி மாணவர்கள் உள்பட மற்றவர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில் கடலுக்குள் இறங்கி தாங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட கப்பல் பயணிகள் முயற்சித்தனர். இவர்களை போலீஸார் தடுத்ததால் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
தென்கொரிய பிரதமர் Chung Hong-won அவர்கள் நேரில் வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் உறவினர்கள் தனிப்படகுகளில் கடலுக்கு இறங்கி தேட வேண்டாம் என்றும் பயிற்சி பெற்ற மீட்புப்படையினர் தேடி வருவதால், உறவினர்கள் அமைதி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் பிரதமரின் சமாதானத்தை உறவினர்கள் ஏற்கவில்லை. பயணிகளின் உறவினர்களில் ஒருவர் பிரதமர் மீது தண்ணீர் பாட்டில் ஒன்றை வீசி, பயங்கர ஆத்திரத்துடன் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பிரதமரின் பாதுகாவலர்கள் பிரதமரை சுற்றி நின்று அவருக்கு பாதுகாத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளின் உறவினர்கள் பலர் படகுகளை வாடகைக்கு எடுத்து கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் 61,000 டாலர் கொடுத்து 10 படகுகளையும், சில மீட்பு வீரர்களுடனும் கடலுக்குள் இறங்க தயாராக உள்ளார். ஆனால் அவருக்கு போலீஸார் அனுமதி கொடுக்காததால் அந்த பகுதியில் பதட்டம் நீடித்துள்ளது.
தென்கொரியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள பயங்கர விபத்து இது என்று கூறப்படுகிறது. இரவு பகலாக மீட்புப்படையினர் பயணிகளை தேடி வருகின்றனர். இதுவரை 164 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளிக்குழந்தைகள் யாரும் இதுவரை கிடைக்கவில்லை.