திமுகவில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பசாமி பாண்டியன் அதிரடி நீக்கம்.

dmkசொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை ஆன ஜெயலலிதா விரும்பினால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூர் தொகுதியை ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுக்க தயார் என அறிவித்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா விடுதலை அடைந்ததற்காக வாழ்த்து தெரிவித்ததோடு பட்டாசு வெடித்து கொண்டாடிய முன்னாள் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply