நிலம் கையகப்படுத்துதல் சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த நான் தயார் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சவால் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய மசோதா பாராளுமன்றத்தின் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், போதுமான பலம் இல்லாததால், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கிறது. இந்த புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும், பிரதான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரே உள்பட பல சமூக ஆர்வலர்களும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில், ”மசோதா குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு விவரம் தெரிவித்தால், மசோதாவை திருத்தம் செய்ய அரசு தயார்” என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், இதற்கு அன்னா ஹசாரே பதில் அளிக்கையில், ”நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கேமரா முன்பு நேரடி விவாதம் நடத்த நான் தயார். இதற்கு மோடி தயாரா? என்பதை அரசு அறிவிக்க வேண்டும். இந்த விவாதத்தை மக்கள் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்து உள்ளார்.