லோக்பால் மசோதாவுக்காக வருகிற 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாகவும், ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வலிறுயுத்தி, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே கூறுகையில், “மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லையெனில், குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்தே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, நாட்டு மக்களிடம் வாக்களித்து இருந்தேன். ஆனால் நான் சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து டாக்டர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளனர். இதனால் டெல்லிக்கு பதிலாக எனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில், வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன்” என்று தெரிவித்தார்.