அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் இன்று அண்ணா பல்கலைக் கழக வெப்சைட்டில் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள 542 பொறியியல் கல்லூரிகள் இணைந்துளன.. இந்த கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறித்து பட்டியல் ஒன்றை அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்துள்ள 542 பொறியியல் கல்லூரிகளில் 506 கல்லூரிகள் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளை நடத்துகின்றன. 36 கல்லூரிகள் பி.ஆர்க் படிப்பை நடத்துகின்றன. இந்த கல்லூரிகளில் 2012ல் நடந்த தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி வீதம், ரேங்க் (பெர்பாமன்ஸ்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதேபோல 2013ல் ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த தேர்வுகள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர 2013ம் ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையில் விண்ணப்பித்து இருந்த மாணவர்களின் கட்ஆப் விவரங்கள், ஒவ்வொரு கல்லூரியை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றையும் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியல் மூலம் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள், தாங்கள் சேர உள்ள கல்லூரியின் தரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.