அண்ணாமலையார் கோவில் பாதுகாப்பு: ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை ஓட்டம்!

LRG_20150928105322487236

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணி ஆய்வில், ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பர், 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவர். பக்தர்களுக்கு, அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவிழாக்கள் மற்றும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் போன்றவற்றின், பாதுகாப்பை கண்காணிக்க தமிழக போலீஸ் துறையின் கமாண்டோ பிரிவு, நான்கு ஆளில்லா குட்டி விமானம் வாங்க முடிவு செய்து அதற்காக அரசு, ரூ.27லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

தற்போது, இந்த ஆளில்லா குட்டி விமானத்தை, அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து கமாண்டோ பிரிவுக்கு வழங்கப்பட உள்ளது. ஆளில்லா விமானம், திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் நேற்று கமாண்டோ போலீஸாரும், சென்னை அண்ணா பல்கலை குழுவினரும் ஆளில்லாத விமான சோதனை ஓட்டம் நடத்தினர். 360 டிகிரியில் சுழலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா குட்டி விமானம் அதிக பட்சம், 500 அடி உயரமும், 25 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் பறக்கும் திறன் கொண்டது. 30 நிமிடம் வரை இயங்கும் திறன் கொண்ட பேட்டரி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, அரை மணி நேரத்திற்கு, ஒரு முறை விமானத்தை தரையிறக்கி பேட்டரியை மாற்றி பறக்க விட்டனர். சோதனை ஓட்டத்துக்காக நேற்று அதிகபட்சம், 200 அடி உயரம் வரை பறக்க விடப்பட்டது. இந்த சோதணை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது என, பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர். கார்த்திகை தீப திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பவுர்ணமி கிரிவலத்தின்போதும், ஆளில்லா விமானத்தின் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply