டெல்லி முதல்வரை அடுத்து கேரள முதல்வர் திடீர் போராட்டம்
பொதுவாக போராட்டம் என்றால் எதிர்க்கட்சி தலைவர்கள்தான் நடத்துவது வழக்கம். ஆனால் ஒரு மாநில முதல்வர்களே போராட்டம் நடத்தும் காட்சிகள் சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் ரயில் பெட்டிகள் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று 2008-09 பட்ஜட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மாநில அரசும் வரவேற்பு தெரிவித்த நிலையில் தொழிற்சாலைக்காக 250 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் திடீரென தொழிற்சாலையை அரியானா மாநிலத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளா மாநில முதல்வா் பினராயி விஜயன், இடதுசாரி அமைப்பு எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள ரயில்வே அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின் போது முதல்வா் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகள் மிகவும் பழமையடைந்து விட்டனா். தேய்மானம் அடைந்ததால் அவை இயங்கும் போது மிகுந்த ஓசை வெளிப்படுகிறது. இதனை தவிர்க்க பாலக்காட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைபது அவசியமானதாக உள்ளது. ஆனால் தற்போது தொழிற்சாலையை அரியானாவில் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெறுவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அவா் குற்றம் சாட்டி உள்ளாா்.