ஆளை கொல்லும் ஆன்டிபயோடிக் மாத்திரைகள். ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

p40bடாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது.  சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே… ‘சைடு எஃபெக்ட்’ என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்… எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!

நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்… என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்… தாராளம்!

மருந்தே விஷமாகும்!

”புதிதாக செல்போன் வாங்கினால், ‘இது என்ன மாடல், லேட்டஸ்ட் வெர்ஷனா, என்னென்ன வசதிகள் உண்டு..?’ என்று, கேட்க பல கேள்விகள் உண்டு நம்மிடம். ஆனால், மாத்திரை, மருந்து வாங்கும்போது, ‘எந்த பிரச்னைக்கு எந்தெந்த மாத்திரைகள்..?’ என்று அதை எழுதிய டாக்டரிடமோ, ‘காலாவதியாகும் தேதி என்ன?’ என்று மெடிக்கல் ஷாப்பிலோ யாரும் கேட்பதில்லை. ஆனால், மருந்தே விஷமாகும் அபாயம்கூட இன்றைய மருத்துவச் சந்தையில் சாத்தியம்!” என்று அதிர்ச்சி கூட்டுகிறார், ஓய்வுபெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன். மருந்து, மாத்திரை குளறுபடிகள் பற்றி, தன் 48 ஆண்டுகால மருத்துவ அனுபவத்திலிருந்து பேசினார் டாக்டர்.  

‘ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுங்க..!’

”ஆன்டிபயாடிக் மருந்துகளை இன்று மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மக்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தடவை ஜுரத்துக்காக டாக்டர் எழுதிக் கொடுத்த அதே மருந்தை, அடுத்த முறை ஜுரம் வரும்போது… ‘ஏற்கெனவே இதைத்தானே எழுதினார்’ என்றபடி நேரடியாக மருந்துக்கடைக்குச் சென்று வாங்கிச் சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது. ஆன்டிபயாடிக் மருந்து என்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, உடலில் உள்ள கிருமிகளின் தாக்கத்தை நிறுத்தி, மேலும் வளரவிடாமல் தடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிரச்னைகளைத் தீர்க்கும். ஆனால், எல்லாவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளும், உட்கொள்ளும் அனைவருக்கும் இதைச் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, ஒவ்வொருவரின் உடல் பிரச்னையைப் பொறுத்து, துல்லிய சோதனைக்குப் பிறகு, அவருக்கான மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.

பலரும் இன்றைக்கு மருந்துக்கடைகளுக்குச் சென்று, தங்களின் பிரச்னையை அங்கே எடுத்துச் சொல்லி, மருந்துகளையும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் வாங்கி உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படலாம், அழிக்கப்படாமலும் போகலாம். ஒருவேளை அது அவரது பிரச்னைக்கு ஏற்ற மருந்தாக இல்லாமல் இருந்தால், வாய்ப்புண், குடற்புண், எரிச்சல் என அது கூடுதல் பிரச்னைகளை விளைவிக்கும். மேலும் 5 – 7 நாட்கள் உட்கொள்ள வேண்டிய இதை, அதைவிடக் குறைந்த அல்லது அதிகமான நாட்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். இதுவும் கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நம் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, அதன் பெருக்கத்தைக் குறைத்தோ, அதை முற்றிலுமாக அழித்தோ நம்மை நோயிலிருந்து காக்கும் மருந்துகளே, ஆன்டிபயாடிக் மருந்துகள். பொதுவாக, பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்… நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி, நோயில் இருந்து காக்கும். அது திறன் குறையும் போதோ அல்லது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்போதோ, இந்த மருந்துகள் தேவையாகின்றன. இதுவே தொடர்ச்சியாக இந்த மருந்தை எடுக்கும்போது, ஒருகட்டத்தில் குறிப்பிட்ட பாக்டீரியா, அந்த மருந்தை எதிர்க்கப் பழகிவிடும். பின் மருந்து பயனற்றுப் போக, அந்த பாக்டீரியா தொற்றை ஒழிக்க முடியாமலேயே போய்விடும். எனவேதான், அதிகமாகவோ… தொடர்ச்சியாகவோ இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும், ஆன்டிபயாடிக் மருந்துகள்… பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு… வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடாது. சளி, தடுமன் போன்ற வைரஸால் ஏற்படும் உடல் அசௌகரியங்களுக்கு இது தீர்வாகாது. சோர்வு, வாய் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று முதலிய பக்கவிளைவுகளையும் இந்த மருந்துகள் ஏற்படுத்தும். இந்த மருந்துகளை, மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அலர்ஜி ஆகும் வாய்ப்புகளும் உண்டு. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆன்டிபயாடிக் எடுப்பது கூடாது. இத்தனை ஆபத்தான விஷயங்கள் உண்டு என்பதால், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக்கடை யில் நீங்களாகவே வாங்கி உட்கொள்வது கூடவே கூடாது” என்று வார்த்தைகளில் கண்டிப்பு காட் டிய டாக்டர் நாராயணன், தொடர்ந்தார்…

வலி நிவாரணி தரும் வலிகள்!

”சோர்வு, சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணத்தால்கூட தலைவலி, உடல்வலி ஏற்படலாம். இதற்கு ஓய்வும், ஊட்டச்சத்து உணவுமே மருந்து. ஆனால், மக்களுக்கோ… ‘வலி நிவாரணியே… இன்று சர்வரோக நிவாரணி’ என்றாகிவிட்டது. பலரும் எல்லாவிதமான உடல் சௌகரியங்களுக்கும் ஏதோ சாக்லேட் சாப்பிடுவதைபோல, வலிநிவாரணியைப் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் ஒவ்வாமை, அலர்ஜி, வாந்தி, பேதி என்று தொடங்கி… நரம்புத்தளர்சி, கிட்னி பாதிப்பு வரை ஏற்படலாம். உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது கிட்னியின் பொறுப்பு. அதிகமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும்போது, அந்த மருந்துக் கழிவுகளை ஓயாமல் வெளியேற்றிக்கொண்டே இருக்கும் செயல்பாடு காரணமாக சிறுநீரகம் பழுதாகலாம். எனவேதான் வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பலரையும் அது சிறுநீரகப் பிரச்னையில் கொண்டுபோய் விடுகிறது’’ என்று எச்சரிக்கை தந்த டாக்டர் நாராயணன்,

தரமற்ற மருந்துகள்..!

”ஊழல் இல்லாத இடம் எதுவுமில்லை. அது மருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். விளைவு, தரமில்லாத மருந்துகள் இப்போது அதிகமாக புழக்கத்துக்கு வருகின்றன. அவற்றை சிரமமின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, மருத்துவர்களுக்கு ‘காம்ப்ளிமென்ட்’ என்ற பெயரில் கமிஷன் கொடுத்து, தங்கள் நிறுவன மருந்துகளையே அதிகமாக எழுத வைக்கின்றன சில நிறுவனங்கள். எனவே, நீங்கள் நாடிச் செல்லும் மருத்துவர் நம்பகமானவராக, நீங்கள் நீண்ட நாள் அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். ‘பெரிய மருத்துவமனை’ என்பதைவிட, நல்ல மருத்துவமனையை நாடிச் செல்லுங்கள்.

எல்லா மருந்து, மாத்திரைகளையும் ‘எக்ஸ்பைரி டேட்’ (காலாவதி தேதி) பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். மருந்துக்கடைகளில், நீங்கள் கொடுத்த மருத்துவச் சீட்டில் உள்ள மருந்துக்குப் பதிலாக, ‘இந்த கம்பெனி மருந்து இல்லை, வேற கம்பெனி மருந்து தரட் டுமா?’ என்று கேட்பது பெரும்பாலும் நடக்கும். இத்தகைய சூழலில், வேறொரு கடையை நாடிச் செல்வது நலம். அங்கும் கிடைக்கவில்லை என்றால்… இரண்டு நிறுவன மருந்துகளின் சேர்க்கைப் பொருட்களும் ஒன்றுதானா என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிறகு வாங்குங்கள். இது தொடர்பாக டாக்டரின் அறிவுரையையும் கேட்டுப் பெறுங்கள்.

மருத்துவச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதைப் போல, ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, விட்டமின், ஹார்மோன், மனஅழுத்த மருந்துகளையும் இஷ்டம்போல விற்பனை செய்யாமல், மருத்துவ பரிந்துரையின் பேரில் விற்பனை செய்யும் வகையிலான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்” என்று அக்கறை யோடு சொன்னார்.

இத்தகைய மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது… குழந் தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன… அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன..?

Leave a Reply